1955 இந்தித் திணிப்பை எதிர்த்து, தேசியக் கொடியை எரிக்கும்
கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார். காமராசர்
உறுதிமொழியை ஏற்று, அக்கிளர்ச்சியை ஒத்திவைத்தார்.
1956 தட்சிணப்பிரதேசம் எனும் கேடான அமைப்பைக் கைவிடுமாறு
காமராசர், நேரு ஆகியோரைத் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார்.
காமராசர் தட்சிணப் பிரதேச அமைப்பை நிராகரித்தார். இராமன்
பட எரிப்புக் கிளர்ச்சி தொடர்பாகப் பெரியார் கைது
செய்யப்பட்டார். மொழிவாரிப் பிரிவினைக்குப்பின் தனித்
தமிழ்நாடு பிரிவினைக் கொள்கையை வலியுறுத்தினார்.
1957 திருச்சியில் வினோபா பாவேயைச் சந்தித்து உரையாடினார்.
திருச்சி கலெக்டர் மலையப்பன் மீது பார்ப்பன நீதிபதிகள் அளித்த
தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக கோர்ட் அவமதிப்புக் குற்றம்
சுமத்தப்பட்டு பெரியார் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு
தொடர்பாக நீதிமன்றத்தில் பெரியார், வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு ஸ்டேட்மென்டை தாக்கல் செய்தார். தஞ்சையில்
03.11.1957 இல் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியாருக்கு
எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்டன.
அம்மாநாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல்
சட்டப்பிரிவைக் கொளுத்தும் கிளர்ச்சியை அறிவித்தார்.
அக்கிளர்ச்சியில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். சில
ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறையில் இருவரும்,
விடுதலையானவுடன் உடல்நலிவுற்று இருபதுபேரும் மாண்டனர்.
பார்ப்பனருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில்
பேசியதாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தால் ஆறுமாதம் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டு சிறையேகினார்.
1958 சோசலிச இயக்கத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா
பெரியாரைக் கண்டு உரையாடினார். பல மாதங்களாக சென்னை
முரளி கபே முன் நடை பெற்ற பிராமணாள் பெயர் அழிப்புக்
கிளர்ச்சி வெற்றிபெற்றது.
திராவிடர் கழகத்தின் சார்பில் பல மாவட்டங்களில் நடைபெற்ற
சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகளில் பெரியாரும் ‘நாம்
தமிழர்’இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனாரும் கலந்து கொண்டனர்.
திருச்சி பெரியார் மாளிகையில் தோழர் கி. வீரமணி மோகனா
வாழ்க்கை ஒப்பந்தத்தை 7.12.58இல் பெரியார் நடத்தி வைத்தார்.
புரட்சிக் கவிஞர் வாழ்த்துக் கவிதை வழங்கிச் சிறப்பித்தார்.
1959 வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லக்னோ, டில்லி,
கான்பூர், பம்பாய் முதலிய இடங்களுக்குச் சென்று பகுத்தறிவு
சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரம் செய்தார். முத்தமிழ்க்
காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம் நடத்திய ‘ஆகாஷ்வாணி’ பெயர்
ஒழிப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கினார்
