1934 ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். பகுத்தறிவு தினசரி
இதழை சில காலம் நடத்தினார். ‘பகுத்தறிவு’ வார ஏட்டில் முதன்
முதலாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தினார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் பெரியாரை ஈரோட்டில் சந்தித்து
உரையாடினார்.
1935 ஈ.வெ.ரா. வேலைத்திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டதால்,
பெரியார் நீதிக்கட்சியை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம்
செய்தார். ‘பகுத்தறிவு’ வார ஏடு நிறுத்தப்பட்டு, மாத ஏடாக
வெளிவந்தது. ‘விடுதலை’ இதழ் வாரம் இருமுறை ஏடாக
வெளிவரத் துவங்கியது. குடிஅரசு மீண்டும் வார ஏடாக வரத்
தொடங்கியது.
1936 பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மையார்
28.07.1936இல் இயற்கை எய்தினார். நீதிக்கட்சியை ஆதரித்துத்
தேர்தல் பிரச்சாரம் செய்தார்
1937 டாக்டர்.சி.நடேசனார் 18.02.1937 இல் மறைவுற்றதற்குப் பெரிதும்
வருந்திக் ‘குடிஅரசி’ல் இரங்கலுரை தீட்டினார். தேர்தலில்
நீதிக்கட்சி தோல்வியுற்றுக் காங்கிரஸ் வெற்றிபெற்றது. எனினும்
உடனடியாகப் பதவி ஏற்க காங்கிரஸ் முன்வராததால், கவர்னரின்
வேண்டுகோளின்படி ஜஸ்டிஸ் கட்சியினரின் இடைக்கால ஆட்சி
சிறிது காலம் நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் அமைச்சரவை
அமைக்க முன்வந்தது. ராஜாஜி, காங்கிரஸ் முதலமைச்சராகப்
பதவி ஏற்று இந்தித் திணிப்பு , கல்வி ஒழிப்பு போன்ற தமிழர்
விரோத ஆட்சியை நடத்தினார். இந்தித் திணிப்பை எதிர்த்து
திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை
ஆற்றினார்.
1938 இந்தித்திணிப்பை எதிர்த்துப் பெரும்போர் மூண்டது. இந்தியை
எதிர்த்துத் தமிழர்பெரும் படை சென்னை நோக்கி அணிவகுத்துச்
சென்று திருவல்லிக் கேணி கடற்கரையை அடைந்தது.
கடற்கரையில் கூடிய பெருங்கூட்டத்தில் “தமிழ்நாடு
தமிழருக்கே!” என்று பெரியார் முழங்கினார். சென்னையில் கூடிய
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 13.11.1938 இல் ‘பெரியார்’
என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சியில் பல்லாயிரவர் கைதாகிச் சிறை ஏகினர். பெரியார் 2
ஆண்டுச் சிறைத்தண்டனை பெற்றுச் சிறையில்
அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே நீதிக்கட்சித்
தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
