சூடு பட்ட புரோகிதர்கள்
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம்
ஆகிவிட்டபடியால் மிகவும்
நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன்
தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார்.
பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில்
சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது
கேட்ட மன்னர் வேதனையுற்றார்.
தன் தாயாரிடம் சென்று "அம்மா,
உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக
இருக்கிறது" என்று
கேட்டார்.
அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம்
கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன்
ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.
மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது
தாயார் மரணம் அடைந்து விட்டார்.
மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.
அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து
ஆலோசனை கேட்டார்.
பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது
ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.
மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய
ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க
மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு
மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக்
கொண்டனர்.
இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான்.
புரோகிதர்களுக்குத் தக்க
பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத்
துணிந்தான்.
புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள்
அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால்
முடிந்தளவு தருகிறேன்"
என்றான்.
புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு
வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச்
செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே
நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால்
ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.
புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள்.
பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.
இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.
பின் தன் பணியாட்களை அனுப்பி
தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப்
பார்த்ததும் "ஏனடா
புரோகிதர்களுக்கு இவ்வாறு
சூடு போட்டாய்" என்று கேட்டார்.
"மன்னாதி
மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான்
சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய்
வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என்
தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான்
சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால்
என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு
சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள்
சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.
இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது
முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.
இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன்
சற்றுக் கேளுங்கள்"
என்றான்.
முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள்
ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக்
கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................"
அதுபோலவே என் தாயாரின் வலிப்பு
நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால்
தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான்.
இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார்.
தெனாலிராமனைப் பாராட்டினார்.
புரோகிதர்களின் பேராசையையும்
புரிந்து கொண்டார்.
வைத்திய செலவு
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து
பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு
சேட்டும் "பணத்தை
எப்போது திருப்பிக்கொடுப்பாய்"
என்று கேட்டார்.
தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப்
பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு
பணம் கொடுத்தான்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து
பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட்
தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை
விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே
உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு
யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.
"சரி
குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன்
நீயும் வா" என்று அவனையும் அழைத்துக்
கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப்
புறப்பட்டனர்.
போகும் போது குதிரையையும் கூடவே
ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.
சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய
கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு
பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.
அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த
பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான்
இக்குதிரையைக் கொடுப்போன்"
என்றான்.
தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக
இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற
மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும்
பூனையையும் வாங்கிச் சென்றான்.
பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால்
ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று
நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே"
என்றான்.
அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான்
உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே
குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு
மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.
மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக
விசாரித்தார். பின்
தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.
அதிசயக்குதிரை
ிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப்
படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க
மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு
குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு
குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு
சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து
புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக
புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால்
கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல்
மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால்
அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும்
பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி
இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி
அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு
வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக
திருப்திகரமாக இருந்ததால்
மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன்
குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க
முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை
என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு
நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த
துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார்.
உடனே குதிரை அது புல்தான் என்று
நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக்
கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும்
தாடியை குதிரையிடமிருந்து
விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது.
மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான்
இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு
விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக்
கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட
சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம்
கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே
குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன்
என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால்
குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர்
தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
